பறந்துகொண்டிந்த விமானத்தில் திடீரென கழன்று விழுந்த சக்கரம்!
நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் சென்ற விமானத்தின் முன் சக்கரம் கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4.45 மணியளவில் புத்தா ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் மேலே எழும்பி சென்றபோது, அதன் முன் சக்கரம் திடீரென கழன்று கீழே விழுந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்
எனினும் விமானிகளின் கவனத்திற்கு அது செல்லவில்லை. பயணத்தின்போது, அதற்கான அடையாளங்களை விமானமும் வெளிப்படுத்தவில்லை.
இந்த சூழலில், திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் மாலை 5.10 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியதை அடுத்து வழக்கம்போல் நடந்த ஆய்வின்போது, விமானத்தில் முன் சக்கரம் இல்லாதது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காணாமல்போன விமானத்தின் சக்கரத்தை உடனடியாக அவற்றை தேடும் பணி நடந்தது. இதன்போதே ஜனக்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே விமானம் திரும்பும் பகுதியில் முன் சக்கரம் இருந்ததை கண்டுபிடித்த ஊழியர்கள் அதனை எடுத்து சென்றனர்.
அதேவேளை விமானம், முன் சக்கரம் இன்றி 25 நிமிடங்கள் பறந்தபோதும் அது எதுவும் தெரியாமல் விமானிகளும், பயணிகளும் மற்றும் விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்தமை தொடர்பில் நேபாள விமான போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.