நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து... 27 இந்தியர்கள் உயிரிழப்பு!
நேபாளத்தில் ஆற்றில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.
நேபாளத்தின் பொக்காராவிலிருந்து இன்றையதினம் (23-08-2024) காலை காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது, தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.
இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.