கனடாவில் பேருந்தை மோதி குழந்தைகள் உயிரை பலிவாங்கிய சாரதி தொடர்பில் வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்கள்...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பேருந்து ஒன்றை வேண்டுமென்றே பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றின் மீது சாரதி ஒருவர் மோதியதில் இரண்டு குழந்தைகள் பலியான விடயம் கனடாவை கலங்கவைத்துள்ளது.
நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், கியூபெக்கிலுள்ள Laval என்னுமிடத்தில் அமைந்துள்ள பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் பிள்ளைகளைக் கொண்டு விட்டுக்கொண்டிருந்தார்கள் பெற்றோர்.
அப்போது வேகமாக வந்த பேருந்து ஒன்று அந்த குழந்தைகள் காப்பகத்தின்மீது மோதியது. இந்த பயங்கர சம்பவத்தில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
படுகாயமடைந்த ஏழு குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
அந்த பேருந்தை இயக்கிய Pierre Ny St-Amand (51) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். Pierre குழந்தைகள் மீது மோதியதும், பேருந்திலிருந்து வேகமாக இறங்கினாராம். உடனடியாக தன் உடைகள் அனைத்தையும் களைந்து நிர்வாணமான நிலையில், பயங்கரமாக கத்தத் துவங்கினாராம். உடனடியாக, அருகில் வசிக்கும் சிலர் Pierre மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளி, பொலிசார் வரும் வரை அவரைப் பிடித்துவைத்திருக்கிறார்கள்.
Pierre எதனால் குழந்தைகள் காப்பகம் மீது பேருந்தை மோதினார் என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
image - Ryan Remiorz/The Canadian Press