கனடாவில் ஒரே மாதத்தில் தொழில்களை இழந்த 31000 பேர்!
கனடாவில் ஒரே மாதத்தில் 31000 பேர் தொழில்களை இழந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜுலை மாதம் 31000 பேர் தொழில்களை இழந்துள்ள நிலையில், ஜூன் மாதம் 43000 பேர் தொழில்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்கள் உற்பத்தி செய்யும் துறைகளில் 23000 பேர் கடந்த மாதம் தொழில்களில் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.
எனினும், இந்த மாதத்தில் 53000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். கனடாவில் சுகாதாரத்துறையில் கூடுதல் எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரே மாதத்தில் சுகாதாரம் சார் துறைகளில் 22000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
சுகாதாரத்துறையில் பணியாளர்கள் தொழில்களிலிருந்து நீக்கப்படவில்லை எனவும் சுயவிருப்பின் அடிப்படையில் அதிகளவானவர்கள் விலகிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் தொழிலற்றவர்கள் எண்ணிக்கை 4.9 வீதமாக பதிவாகியுள்ளது.