கல்கரியில் சொத்து வாங்கக் காத்திருப்போருக்கு அதிர்ச்சி
கனடாவின் கல்கரி மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய 4 ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, சொத்து உரிமையாளர்களுக்கும் புதிதாக வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த ஒரே ஆண்டிற்கான சொத்து வரி உயர்வு இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
கல்கரியின் நகராட்சி பாதீடு தற்போதைய 5.9 டொலர் பில்லியனில் இருந்து 2030-க்குள் 7.8 டொலர் பில்லியன் ஆக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குச் சொத்து வரி தொடர்ச்சியாக உயர்த்தப்படவுள்ளது.

இந்த முன்மொழிவு ஒப்புதல் பெற்றால், ஒரு சராசரி ஒற்றைக் குடும்ப வீட்டிற்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு சுமார் 50 டொலர் வரை கூடுதல் செலவு ஏற்படும்.
2027-ஆம் ஆண்டில்: 688,000 டொலர் மதிப்பிலான சராசரி வீட்டைக் கொண்டுள்ள ஒருவர், நகராட்சி வரியாக மாதத்திற்கு 37 டொலர் அதிகமாகவும், குடிநீர், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி போன்ற சேவைகளுக்கு மாதத்திற்கு 16 டொலர் அதிகமாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.
2026-இல் 706,000 டொலராக இருந்த வீட்டின் சராசரி மதிப்பு 2027-இல் 2.5% குறைந்து 688,000 டொலராக மதிப்பீடு செய்யப்பட்டாலும், இந்த வரி உயர்வால் கட்டணம் அதிகரிக்கவே செய்யும். கான்டோக்களின் மதிப்பும் 5.6% குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி மட்டுமன்றி, வணிக உரிமங்கள், பொழுதுபோக்கு மையக் கட்டணங்கள், செல்லப் பிராணிகளுக்கான உரிமங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகின்றன.