கனடாவில் நூதன முறையில் இடம்பெற்ற கப்பம் கோரல் முயற்சி
கனடாவின் கல்கரி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஆண்டு காணாமல் போன தனது சகோதரியை தேடி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி பணயக்கைதி புகைப்படம் மூலம் மோசடி கும்பலால் மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
31 வயதான டியானா எரிக்சன் (Deeanna Erickson) கடந்த ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில், வால்டன் (Walden) பகுதியிலுள்ள ஒரு வர்த்தக நிலையமொன்றுக்கு அருகே பேருந்திலிருந்து இறங்கிய பின்னர் கடைசியாக காணப்பட்டார்.
அப்போது அவர் மனஅழுத்தம் அல்லது குழப்பமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. டியானாவின் சகோதரி ஷெல்பி எரிக்சன் (Shelby Erickson), தனது சகோதரி வீடு திரும்ப உதவி கேட்டு யாரிடமாவது லிப்ட் கேட்டிருக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

டியானா தானாகவே எங்காவது போய்விடவில்லை; அவள் திடீரென மறைந்துவிடவும் இல்லை. யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை அறிவார், ஆனால் அவர்கள் முன்வரவில்லை, என ஷெல்பி கூறினார்.
டியானாவை கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் ஷெல்பி தொடர்ந்து விழிப்புணர்வு பதிவுகளை பகிர்ந்து வந்தார். இதுவே மோசடி கும்பலின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் ஷெல்பியை தொடர்புகொண்டு, 10,000 டாலர் மதிப்பிலான பிட்காயின் பணம் கோரியுள்ளனர்.
அழுத்தம் கொடுக்க, டியானா ஒரு வானில் கட்டிப்போட்டு பணயக்கைதியாக வைத்திருப்பது போல AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தையும் அனுப்பி, பணம் செலுத்தாவிட்டால் கொலை செய்யப்படும் என மிரட்டியுள்ளனர்.
அந்த நேரத்தில் நான் அதிர்ச்சியிலும் கடும் பயத்திலும் இருந்தேன் எனவும் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொண்டேன் எனவும் ஷெல்பி தெரிவித்துள்ளார்.
காணாமல் போன நபர்களை தொடர்புடைய சம்பவங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பொலிஸாரும் தொழில்நுட்ப நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களை குறிவைத்து, குற்றவாளிகள் பணம் பறிக்க முயலும் சம்பவங்களை இப்போது அதிகமாக இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி கும்பலின் இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்திற்கிடையிலும், ஷெல்பி தனது சகோதரியை கண்டுபிடிக்கும் முயற்சியை நிறுத்தவில்லை.
டியானாவை “அனைத்து மனிதர்களையும் விலங்குகளையும் நேசித்த அன்பான பெண்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தேடுதல் நடவடிக்கைகளுக்காகவும், வெகுமதி அறிவிப்பதற்காகவும், விளம்பர பலகைகள் (billboards) அமைப்பதற்காகவும், ஷெல்பி நிதி திரட்டலை தொடங்கியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது. டியானா எரிக்சன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 403-266-1234 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.