கனடாவில் மீண்டும் எல்லைகளை மூடுகிறதா ட்ரூடோ நிர்வாகம்? வெளியான தகவல்
Omicron பரவலை கருத்தில்கொண்டு அத்தியாவசியமற்ற பயணங்களை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் என ட்ரூடோ நிர்வாகம் கோரிக்கை வைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் கனேடிய நிர்வாகம் அறிவுறுத்த இருப்பதாக வெளியான தகவலால், கனடா மீண்டும் எல்லைகளை மூட முடிவு செய்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே, வெளியான தகவலின் உண்மைத்தன்மை தொடர்பில் உறுதி செய்ய முடியவில்லை என பிரபல உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களுக்கான பரிந்துரைகள் புதன்கிழமை அறிவிக்கப்படலாம் என்றே தெரியவந்துள்ளது. இதே அளவிலான கட்டுப்பாடுகளை 2020 மார்ச் மாதமும் ட்ரூடோ நிர்வாகம் அறிவித்தது.
அதன் பின்னர் தொடர்புடைய கட்டுப்பாடுகளை, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமே விலக்கிக்கொண்டது. இதனிடையே, மாகாண முதல்வர்கள் மற்றும் பிரதமர் ட்ரூடோ உடனான 90 நிமிட கலந்தாலோசனை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, வேறு பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பிலும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடியிருப்பாளர்கள் அல்லது அவர்கள் வரும் நாட்டைப் பொருட்படுத்தாமல், கனடாவுக்குத் திரும்பி வரும் அனைத்து நபர்களுக்கும் விமான நிலையங்களில் சோதனை செய்வது என்பது தற்போதைய சூழலில் நடைமுறை சாத்தியமாக கருதப்படுகிறது.
தற்போது கனேடியர்கள் அல்லது நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் வெளிநாட்டிலோ அல்லது அமெரிக்காவிற்கோ குறுகிய நாட்கள் பயணம் மேற்கொண்டு திரும்பினால், அவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என ஆதாரம் சமர்ப்பிக்க தேவையில்லை.
இன்னொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில், வெளிநாட்டவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரையில் கனடாவில் அனுமதி மறுப்பது என கூறப்படுகிறது.
ஆனால் அதுபோன்ற ஒரு கடும்போக்கு நடவடிக்கையை ட்ரூடோ நிர்வாகம் முன்னெடுக்குமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.