கொங்கோவில் இருந்து வருபவர்களிற்கு கனடா தடை
எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த 21 நாட்களில் கொங்கோவிற்குச் சென்று வந்த வெளிநாட்டினருக்குத் தங்கள் நாட்டுக்குள் நுழையக் கனடா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இப்புதிய தடை உத்தரவு திங்கட்கிழமை (20) இரவு 11:59 மணி முதல் அமுலுக்கு வருவதுடன் இது வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

உலக சுகாதரா ஸ்தாபனம் எச்சரிக்கை
கொங்கோவிற்குச் சென்று வந்த வெளிநாட்டுப் பயணிகளைக் கனடாவிற்கு வரும் வணிக ரீதியிலான மற்றும் தனியார் விமானங்களில் ஏற்றுவதற்கு விமான நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடியக் குடிமக்கள், நிரந்தர வதிவிடவுரிமை பெற்றவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் கனடா வந்தடைந்தவுடன் கட்டாய 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் இந்தத் தடை உத்தரவு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
பரவி வரும் நோய்த்தொற்றின் போது குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணத் தடையோ அல்லது வர்த்தகத் தடையோ விதிப்பது, அந்த நாட்டு மக்கள் மீதான சமூக ஒதுக்கல்/அபகீர்த்தியை (Stigma) உருவாக்குவதுடன், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளை மேலும் கடினமாக்கும் என உலக சுகாதரா ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எபோலா வைரஸ் பரவுவது ஒருவரின் குடியுரிமையையோ அல்லது இனத்தையோ பொறுத்தது அல்ல என்றும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொங்கோவில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், 828 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவும் கடந்த வாரம் கொங்கோவிற்குச் சென்று வந்த தங்கள் நாட்டுப் பயணிகள் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.