அந்த நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கு தடை: கனடா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடான omicron தொற்று காரணமாக கனடா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
தென்னாப்ரிக்காவின் பொஸ்வானா நாட்டில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா மாறுபாடு omicron தொற்றால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
வீரியம் மிகுந்த omicron தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாட்டை விட பல மடங்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல துரித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், தென்னாபிரிக்க நாடுகள் வழியாக கடந்த 14 நாட்களில் பயணம் செய்துள்ள பயணிகள் கனடாவில் வர அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களில் தென்னாபிரிக்கா ஊடாக பயணம் செய்து, கனடாவில் தற்போது தங்குவோரும் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, அவர்கள் உடனடியாக கொரோனா சோதனை முன்னெடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்னாபிரிக்கா, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே, பொஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகள் வழியாக பயணித்தவர்கள் கொரோனா சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகும் வரையில், குறித்த பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து கனடாவுக்கு தற்போது நேரடி விமான சேவைகள் இல்லை என்றே போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்துள்ளார்.
கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர்கள், குறிப்பிட்ட நாடுகள் வழியாக இன்னொரு நாட்டுக்கு சென்று கனடா திரும்புபவர்களும் கட்டாயம் கொரோனா சோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், கனடா திரும்பிய பின்னரும் அவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.