ரஷ்யாவில் பிளேக் ஆராய்ச்சி மைய ஊழியர் மர்ம மரணம்: நூற்றுக்கணக்கானோர் கண்காணிப்பில்
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் பிளேக் நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய இளம் பெண் ஊழியர் ஒருவர், காரணம் கண்டறியப்படாத தீவிர நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , நூற்றுக்கணக்கானோர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச அளவில் அவதானிக்கப்பட்டு வரும் நிலையில், கனடா அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எனினும் கனடா மக்களுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் கனடாவின் சுகாதார அமைச்சர் மார்ஜோரி மிஷேல் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தனது உலகளாவிய பொது சுகாதார புலனாய்வு வலையமைப்பு மூலம் இந்நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், தற்போது கனடாவுக்கு எந்தப் அச்சுறுத்தலும் கண்டறியப்படவில்லை என்றும் கனடாவின் பொது சுகாதார முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் மனிதர்களுக்குப் பிளேக் நோய் ஏற்படுவது மிக அரிதானது என்றும், கடைசியாக 1939 ஆம் ஆண்டிலேயே கனடாவில் பிளேக் பாதிப்பு பதிவானதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இந்த உயிரிழப்பு குறித்து பல மர்மங்கள் நீடிப்பதாக ரொறன்ரோ பொது மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் எச்சரித்துள்ளார்.
"இறந்தவர் பிளேக் நோயினால் தான் உயிரிழந்தாரா என்பது கூட நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவர் அந்த நோய்க்கிருமி ஆய்வு செய்யப்படும் ஆய்வகத்தில் பணிபுரிந்தார் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்த உண்மை" என்று அவர் கூறியுள்ளார்.