மன்னர் சார்லஸ் புகைப்படத்துடன் கனேடிய பணத்தாள்: வெளியான புதிய தகவல்
பிரித்தானிய ராணியார் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரும், கனடா இதுவரை தங்கள் பணத்தாள்களில் மன்னரின் புகைப்படத்தை வெளியிடவில்லை.
இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவுக்கு பின்னரும் கனடாவில் நாணயங்களிலும், 20 டொலர் பணத்தாள்களிலும் அவரது புகைப்படமே இடம்பெற்றுள்ளது.
கனடா தங்களது நாணயத்தில் ஆட்சி செய்யும் மன்னரைக் குறிப்பிட வேண்டும் என்று எந்தச் சட்டமும் குறிப்பிடவில்லை, இருப்பினும், நீண்டகால பாரம்பரியமாக இதை முன்னெடுத்து வருகிறது.
ஆனால் தற்போது வரை, நாணயங்கள் மற்றும் பணத்தாள்களில் ராணியாரின் படங்களை மாற்றுவதற்கான காலக்கெடு எதுவும் முன்வைக்கப்படவில்லை.
கனடா வங்கி தெரிவிக்கையில், மன்னரின் புகைப்படத்துடன் 20 டொலர் பணத்தாள்கள் வெளியாக பல ஆண்டுகளாகலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தில் 5, 10, 20 மற்றும் 50 பவுண்டுகள் பணத்தாள்களில் மன்னரின் படம் மிக விரைவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.