கனடாவில் சாதனை அளவு சோள உற்பத்தி எதிர்பார் பாா்ப்பு
கனடா தேசிய அளவில் சாதனை அளவிலான சோள உற்பத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போதிலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவின் விவசாயிகள் மற்றும் தானியக் கொள்வனவாளர்கள் தாமதமான மற்றும் அதிக செலவு மிக்க அறுவடையை எதிர்கொண்டுள்ளனர்.
கோடைக்காலத்தின் பிற்பகுதியிலும் இலையுதிர்காலத்தின் ஆரம்பத்திலும் பெய்த மழையினால் பயிர்கள் முதிர்ச்சியடைவது தாமதமானதுடன், அறுவடைப் பணிகளும் பல வாரங்களுக்குப் பின் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் வறட்சிக்குப் பிறகு இந்த ஈரப்பதம் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவிய போதிலும், மேகமூட்டமான வானிலையும் சேறும் சகதியுமான வயல்களும் அறுவடைப் பணிகளைப் பெரும் சவாலாக மாற்றியுள்ளன.

மோசமான வானிலை அறுவடைப் பணிகளைத் தடுப்பதற்கு முன்பாகவே தங்களது பயிர்களை அறுவடை செய்துவிட அனைவரும் தீவிரமாக முயன்று வருகின்றனர் என அட்லாண்டிக் தானிய சபையின் தலைவர் ரொபர்ட் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
தீவன ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும் சோளத்தில் ஈரப்பதத்தின் அளவு 15.5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என மெக்டொனால்ட் குறிப்பிட்டார்.
வழமையாக 25 முதல் 28 சதவீத ஈரப்பதத்துடன் அறுவடை செய்யப்படும் சோளம், இந்த ஆண்டு 32 சதவீதத்திற்கும் அதிகமான ஈரப்பதத்துடன் காணப்படுவதால், அதனை உலர்த்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக, தானியங்களை உலர்த்துவதற்கான கட்டணம் கடந்த ஆண்டு டொன் ஒன்றிற்கு சுமார் 40 டொலர்களாக இருந்த நிலையில், இவ்வாண்டு 75 முதல் 80 டொலர்கள் வரை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.