ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கடுமையாக போராடி தோற்றது கனடா
டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று (13) நடைபெற்ற கனடாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கடுமையாக போராடிய ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டு பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜுனைத் சித்திக் பதிவுசெய்த 5 விக்கெட் குவியலும் ஆரியன்ஸ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற உதவின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
கனடா 6ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நவ்னீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் 58 ஓட்டங்களைப் பகிரந்து அணியை ஓரளவு சிறந்த நிலையில் இட்டனர்.
ஹார்ஷ் தக்கர் 50 ஓட்டங்களையும் நவ்னீத் தாலிவல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.