மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு செல்லும் கனடா அஞ்சல் ஊழியர்கள்
கனடா அஞ்சல் நிறுவனத்தின் சுமார் 55,000 பணியாளர்கள் ஒன்றியம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து, திங்கள் அன்று அதிகாரப்பூர்வ வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
இது கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாகக் கனடா அஞ்சல் சேவையை முடக்கக்கூடிய நிலைமையாகக் கருதப்படுகின்றது.
வேலைநிறுத்தம் அமல்பட்ட பிறகு, புதிய கடிதங்கள் அல்லது பார்சல்கள் ஏற்கப்படமாட்டாது என நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மையங்களில் இருக்கும் பொருட்கள் பாதுகாக்கப்பட்டாலும், விநியோகிக்கப்படாது.
ஆனால், சமூக நல உதவித் தொகை காசோலைகள் மற்றும் உயிருள்ள விலங்குகள் மட்டுமே தொடர்ந்து விநியோகிக்கப்படும். புதிய விலங்குகள் அனுப்ப அனுமதிக்கப்படாது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சுமார் 32 நாட்கள் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
பண்டிகை மற்றும் விடுமுறைக் காலத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.
அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பது அஞ்சல் நிறுவனத்தின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.