பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்த விருப்பம்: கனடா பிரதமர்
கனடா மீது ட்ரம்ப் வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமர்.
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் அவர்.
அத்துடன், பதவியேற்றதுமே, தான் ஏற்கனவே கூறியபடி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிப்பு அமுல்படுத்தப்படலாம் என மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
அந்த வரி விதிப்பு பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரலாம் என்றும் ட்ரம்ப் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனடா மீது ட்ரம்ப் 25 சதவிகித வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
கனடா, வலுவான, விரைவான மற்றும் மிக பலமான பழிக்குப் பழி நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என உறுதிபட தெரிவித்துள்ளார் ட்ரூடோ.
ட்ரம்ப் குறித்து தனக்குக் கவலையில்லை என்று கூறியுள்ள ட்ரூடோ, அமெரிக்காவின் இந்த ஜனாதிபதியுடன் பழகுவதில் பெரும் நிலையற்ற தன்மையை தான் எதிர்பார்ப்பதாகவும், இதற்கு முன்பும் தாங்கள் இத்தகைய சூழலைக் கடந்துவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.