கனடாவின் முக்கிய அரச நிறுவனத்தில் ஆட்குறைப்பு
கனடாவின் முக்கிய அரச நிறுவனமொன்றில் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் விரிவான செலவின மறுஆய்வின் ஒரு பகுதியாக, வரும் மாதங்களில் சுமார் 210 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கனடா வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் எரிபொருள் வரி (Federal Fuel Charge) தொடர்பான திட்டங்கள் குறைக்கப்படுவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
.
ஒட்டாவாவிலுள்ள கனடிய வருமான முகவர் நிறுவன தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய அலுவலகங்களில் பணிபுரியும் நிறைவேற்று (Executive) மற்றும் நிறைவேற்று அல்லாத (Non-executive) அதிகாரிகள் இதில் அடங்குவர்.
சுமார் 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அவர்களின் வேலைகளுக்கு ஆபத்து இருப்பதாக அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாற்றங்கள் கனடியர்களுக்கான சேவை வழங்கலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கனடிய வருமான முகவர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
நிர்வாக முறைகளை நவீனப்படுத்துவதன் மூலமும், அரசாங்கத்தின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாத திட்டங்களை நிறுத்துவதன் மூலமும் சேமிக்கப்படும் நிதி, நிறுவனத்தின் முக்கிய பணிகளை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.