மருத்துவ கஞ்சாவுக்கு 200 மில்லியன் டொலர் செலவிடும் கனடா
கனடாவில் முன்னாள் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கான மருத்துவ கஞ்சாவிற்காக ஆண்டிற்கு 200 மில்லியன் டொலர் செலவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ கஞ்சா கோரும் முன்னாள் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த ஆண்டு 200 மில்லியன் டொலர் செலவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கனடாவில் ஒட்டாவா பகுதியிலேயே மருத்துவ ரீதியில் கஞ்சா பயன்படுத்தும் முன்னாள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் கனடா அரசாங்கம் மருத்துவ கஞ்சாவுக்காக 150 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் செலவிட்ட தொகையை விடவும் இது இருமடங்கு என கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது மருத்துவ கஞ்சாவுக்காக 200 மில்லியன் டொலர் செலவிட கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆனால், நிபுணர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த திடீர் அதிகரிப்பு தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் இருந்தாலும், மருத்துவ கஞ்சாவின் உண்மையான நன்மைகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு ஏற்படும் சாத்தியமான தீங்குகள் பற்றிய கூடுதல் தரவுகள் தேவை என ஒப்புக்கொள்கிறார்கள்.
2008ல் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மருத்துவ கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டு கால சட்ட போராட்டங்களுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 112 வீரர்களுக்கு அனுமதிக்கப்பட்டு அதற்கான செலவாக 409,000 டொலர் என தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அதே ஆண்டு 600 என அதிகரித்து 1.7 மில்லியன் டொலர் செலவிடும் நிலைக்கு எட்டியது.
2021-22ல் மொத்தம் 18,000 முன்னாள் வீரர்கள் மருத்துவ கஞ்சா பயன்படுத்துவதற்காக 153 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.