ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் அத்துமீறிய விவகாரம்: ரஷ்ய தூதருக்கு கனடா சம்மன்
ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் அத்துமீறிய விவகாரம் தொடர்பில் ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் அத்துமீறியதாக போலந்து அறிவித்த சில மணி நேரத்துக்குள், கனடாவுக்கான ரஷ்ய தூதரான Oleg Stepanovக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் நள்ளிரவு அல்லது புதன் அதிகாலையில் போலந்துக்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவிய விடயம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், புதன்கிழமையன்று கனடாவுக்கான ரஷ்ய தூதரான Oleg Stepanovக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவிய விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
போலந்து வான்வெளியில் ஊடுருவியதன்மூலம் நேட்டோ வான்வெளிக்குள் ஊடுருவிய விடயம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல என்றும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ட்ரோன் ஊடுருவல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், அது பொறுப்பற்ற செயல் என்றும் கூறியுள்ள கனடா வெளியுறவு அலுவலகம், அது நேட்டோவுடன் மோதலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கனடா உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவை ரஷ்யாவால் மாற்றமுடியாது என்றும் கனடா வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஏற்கனவே ஜேர்மனியும் போலந்து மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பில் ஜேர்மனிக்கான ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.