கனடாவில் மளிகைக்கடை வேலைக்காக வரிசையில் நிற்கும் நூற்றுக்கணக்கானோர்
கனடா தலைநகரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மளிகைக்கடை ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்வரை வரிசையில் நின்ற ஒரு காட்சி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிலுள்ள Barrhaven என்னுமிடத்தில் புதிதாக மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அதில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக நிற்பவர்களில் கேசியும் (Casey McLaughlin)ம் ஒருவர். கேசி இதற்கு முன் Yukon Transportation அருங்காட்சியகத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றிவர்!
இன்று, வாடகை கொடுக்கவேண்டும், மின்கட்டணம் செலுத்தவேண்டும், அதற்கெல்லாம் பணம் வேண்டுமே, அதற்காக மளிகைக்கடையில் வேலை செய்யவும் இன்று நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் கேசி.
அதேபோல, வேலைக்காக விண்ணப்பிப்பதற்காக வரிசையில் நிற்பவர்களில் நஃபீசா (Nafisa Ijie)ம் ஒருவர்.
நஃபீசா, முதுகலைப் பட்டப்படிப்பு முடித்து இங்கிலாந்திலும், நைஜீரியாவிலும் பிசினஸ் அனாலிஸ்டாக பணிபுரிந்தவர் ஆவார்.
எவ்வளவு படித்திருந்தாலும், பணி அனுபவம் இருந்தாலும், கனடாவில் பணி செய்த அனுபவம் இல்லையென்றால் இங்கு வேலை கிடைப்பது கடினம். ஆகவே, ஏதாவது ஒரு சிறிய வேலையைத் துவங்கவேண்டியதுதான் என்கிறார் நஃபீசா.
கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகளின்படி, ஆகத்து மாதத்தில் வேலையின்மை வீதம் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், The Dais என்னும் ஆய்வமைப்பில் ஆய்வாளராக இருக்கும் Viet Vu என்பவரோ, ஒருவர் ஒரு வேலையை விடும்போது, அவருக்கு அடுத்த வேலை கிடைக்கும்வரை சுமார் ஆறு மாதங்கள் வரையாவது வேலையில்லாமல் இருப்பது சாதாரணமான ஒன்றுதான் என்கிறார்.
ஆனால், மக்கள் அந்த ஆறு மாதங்களுக்கும் வாடகையும், மின்கட்டணமும் செலுத்தாமல் இருக்கமுடியாதே!