கனடா ராணுவத்தைக் கேலி செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலர்!
விக்டோரியாவில் கனடா, அமெரிக்கா உட்பட 29 நாடுகளின் உயர் ராணுவத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பே, அமெரிக்கா - கனடா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் கேடட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இளம் பெண்களை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சமூக வலைதளத்தில் கேலி செய்து பதிவிட்டதே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாகும்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்னான் பகுதியில் உள்ள கேடட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சீருடை அணிந்த இரு இளம் பெண்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த பீட் ஹெக்செத், "இதுதான் உண்மை" என்ற தலைப்பில் கேலியாகப் பதிவிட்டிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை அண்மையில் முறிந்த நிலையில், கனடிய ராணுவத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் நோக்கில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கனடாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கனடா பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி இந்த விவகாரத்தில் தனது அமெரிக்க சக அமைச்சருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹெக்செத்தின் பதிவு அவர் வகிக்கும் உயரிய பதவிக்கு அழகல்ல என்று மெக்கின்டி சாடினார்.
அமெரிக்க நிர்வாகத்தின் இத்தகைய வெளிப்படையான கேலிப்பேச்சுகளுக்கும், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தொடரும் உண்மையான ஒத்துழைப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை கனடியர்கள் அறிவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
நாம் இணைந்து செயல்படும்போதே உலக அரங்கில் வலிமையானவர்களாகவும் செல்வாக்குமிக்கவர்களாகவும் இருப்போம் என்றும் மெக்கின்டி சுட்டிக்காட்டினார்.