கனடாவில் கடுமையான குளிர் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் ப்ரைரீஸ் பகுதிகள் முழுவதும் கடும் குளிர் எச்சரிக்கைகள் அமலில் உள்ள நிலையில், ஒன்டாரியோவின் சில பகுதிகளில் பனியுடன் கூடிய பலத்த காற்று ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, அல்பேர்டா, சஸ்காச்சுவான், மணிடோபா, ஒன்டாரியோ, கியுபெக், வடக்கு பிரதேசங்கள் மற்றும் அட்லாண்டிக் கனடாவின் பல பகுதிகளில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு அல்பேர்டா பகுதியில் வியாழக்கிழமை முழுவதும் காற்றழுத்த குளிர் (Wind Chill) அளவுகள் -40 முதல் -50 பாகை செல்சியஸ் வரை மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த அளவிலான கடும் குளிர் அனைவருக்கும் ஆபத்தானது,” என எச்சரித்துள்ள அதிகாரிகள், எளிதில் அணியவும் அகற்றவும் கூடிய அடுக்குத் துணிகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சஸ்காச்சுவான் மாகாணத்தில் தென்மேற்கு மூலையைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
“பல நாட்கள் நீடிக்கும் கடும் காற்றழுத்த குளிர் நிலை” தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய பகுதிகளில் அல்பேர்டாவைப் போலவே -45 பாகை அளவிலான குளிர் வெள்ளிக்கிழமை இரவு வரை தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் காரணமாக, மூச்சுத் திணறல், மார்புவலி, தசை வலி மற்றும் பலவீனம், கை மற்றும் கால் விரல்களில் உணர்விழப்பு மற்றும் நிற மாற்றம் போன்ற அறிகுறிகளை கவனிக்குமாறு கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.