கனடிய பல்கலைக்கழக பீடாதிபதியை கைது செய்ய நாடு தழுவிய பிடிவிராந்து
கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி ஜொனாதன் பிளாக்-பிரான்ச் மீது, அவரது பதவிக்காலத்தில் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக் காவல்துறையின் தகவல்படி, கடந்த மார்ச் 30-ம் திகதி 5,000 டொலருக்கும் அதிகமான மோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் உள் விசாரணை அறிக்கையின்படி, 2016 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் சுமார் 600,000 டொலர்கள் பல்கலைக்கழக நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெரும் பகுதி ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 'தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக' (Professional Development) செலவிடப்பட்டுள்ளது.
மேலும், தங்குமிடம், உணவு மற்றும் உறுப்பினர் கட்டணங்களுக்காகவும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2020-ல் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஜொனாதன், தற்போது கனடாவில் இல்லை எனக் கருதப்படுகிறது.
அவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கக்கூடும் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2025 மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, அவர் முறைகேடு செய்த 679,269.98 டொலர் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என மனிடோபா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.