கனடா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்
கடந்த ஆண்டு சீனாவின் மின்சார வாகனங்கள் (EVs), எஃகு மற்றும் அலுமினியத்திற்கு கனடா விதித்த வரிகளை தளர்த்துவதை அரசு பரிசீலிக்கவில்லை என்று கைத்தொழில் அமைச்சர் பிரான்சொயிஸ்-பிலிப் சாம்பெயின் அறிவித்துள்ளார்.
கனடா கடந்த அக்டோபரில் சீன மின்சார வாகனங்களுக்கு 100% இறக்குமதி வரி, சீன உருக்கு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதித்தது.
இதற்கு பதிலடியாக சீனா கடந்த வார இறுதியில் கெனோலா எண்ணெய் மற்றும் இறால் உள்ளிட்ட கனடிய விவசாய பொருட்களுக்கு $4 பில்லியன் மதிப்புள்ள வரிகளை விதித்துள்ளது.
“நாங்கள் எங்கள் தொழில்துறையை பாதுகாக்க விரும்புகிறோம். எங்கள் தொழிலாளர்களையும் சமூகங்களையும் பாதுகாக்க வேண்டும்” என அமைச்சர் சாம்பெயின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் வழியை பின்பற்றி, சீனா "அநியாயமான குறைந்த விலையில்" மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை மோதலாக்குவதாக குற்றம் சாட்டி கனடா இந்த வரிகளை விதித்தது.
இதேவேளை, கனடா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் வர்த்தக போர் கனடாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளும் என பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி, எச்சரித்துள்ளார்.
“உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார சக்திகளுக்கிடையே நாங்கள் நசுங்க விரும்பவில்லை” என்று எபி குறிப்பிட்டுள்ளார்.