கனடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடா முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில், ஒசெம்பிக் (Ozempic) மற்றும் மௌன்ஜாரோ (Mounjaro) ஆகிய மருந்துகளின் போலி (counterfeit) பதிப்புகள் விற்பனை செய்யப்படுவதாக கனடிய சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
GLP-1 வகை மருந்துகளின் அனுமதியற்ற பதிப்புகள் — குறிப்பாக செமாக்ளூடைடு (Semaglutide) அடங்கிய ஒசெம்பிக், ரைபெல்சஸ் (Rybelsus), வெகோவி (Wegovy) போன்ற பிரபல மருந்துகளின் போலி வடிவங்கள் — கடைகளிலும் இணையத்திலும் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இணையதளங்களும் சமூக ஊடக விளம்பரங்களும், ஹெல்த் கனடாவின் அதிகாரப்பூர்வ லோகோக்களை தவறாக பயன்படுத்தி, போலி அங்கீகாரங்களை காட்டி, நுகர்வோர்களை ஏமாற்றுகின்றன என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த அனுமதியற்ற மருந்துகள் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றில் மதிப்பாய்வு செய்யப்படாததால், அவை மிகவும் ஆபத்தான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், உடலில் இயற்கையாக சுரக்கும் GLP-1 ஹார்மோனை பின்பற்றி செயல்படும் இந்த மருந்துகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. இவை வகை-2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் பருமன் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அனுமதியற்ற அல்லது போலி ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், ஸ்டெரிலைசேஷன் இல்லாமை காரணமாக தொற்றுகள், அலர்ஜி எதிர்வினைகள் மற்றும் தவறான கையாளல் அல்லது மாசுபாடு காரணமாக தீவிர உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே அனுமதியற்ற மருந்துகளை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது,” என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியற்ற மருந்துகளை விற்பனை செய்வதும், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் என பொய் அல்லது தவறான விளம்பரங்கள் செய்வதும் கனடாவில் சட்டவிரோதம் என விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.