முன்னாள் சக பணியாளரை துன்புறுத்தியதாக கனடியர் மீத அமெரிக்காவில் குற்றச்சாட்டு
கனடாவிலிருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் வரை தனது முன்னாள் சக பெண் ஊழியரைப் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தியதாக, கனடாவைச் சேர்ந்த நிக்கோலாய் ஜார்ஜியேவிச் சாபோவ் என்பவர் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டெக்சாஸ் வட பகுதி அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில எல்லை கடந்து பின்தொடர்ந்தது மற்றும் மின்னணு தொடர்புகள் மூலம் துன்புறுத்தியது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சாபோவ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினரால் சாபோவ் கைது செய்யப்பட்டார்.
குறித்த கனடியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு பிரிவின் கீழும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருவரும் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றியபோது சாபோவிற்கு அப்பெண் அறிமுகமாகியுள்ளார்.
அப்பெண்ணின் சமூக வலைதளங்கள், குடும்பத்தினரின் கணக்குகள் ஆகியவற்றைக் கண்டறிந்து தேவையற்ற பரிசுகளையும் கடிதங்களையும் அவரது வீடுகளுக்கு அனுப்பி துன்புறுத்தியுள்ளார்.
2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஃபுளோரிடாவின் ஆர்லாண்டோ மற்றும் பிளான்டேஷன் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று பின்தொடர்ந்துள்ளார்.
அப்பெண் தங்கியிருந்த டெக்சாஸின் டல்லாஸ் நகருக்கு டொராண்டோவிலிருந்து சாபோவ் சென்றுள்ளார்.
அங்கு அப்பெண்ணின் குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் சுற்றியபோது உள்ளூர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.
தொடர்ந்து தேவையற்ற மெசேஜ்களை அனுப்பி வந்த சாபோவ், செயற்கை நுண்ணறிவு மூலம் அப்பெண்ணின் உருவத்தை மாற்றி அமைத்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் உருவாக்கியுள்ளார்.