தந்தையர் தினமும் உலக அகதிகள் தினமும் ஒன்றாக அமைந்த நாளில் கனடாவாழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கை
தந்தையர் தினமும் உலக அகதிகள் தினமும் ஒன்றாக அமைந்த நாளான நேற்றைய தினம், கனடாவாழ் புலம்பெயர்ந்தோர் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள். தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாளில், குடும்பங்களை இணைக்குமாறும், முழு புலம்பெயர்ந்தோர் நிலை வழங்குமாறும் அவர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வலியுறுத்தியுள்ளார்கள்.
அகதிகளை வரவேற்கும் நாடு என்று பெயர் பெற்றுள்ள கனடா, 2020இல் வெறும் 25,000 அகதிகளை மட்டுமே நாட்டுக்குள் அனுமதித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதி மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.
ஆனால், அதை மறுத்துள்ள புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சக அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர், கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலுமே புலம்பெயர்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கனடாவிலும் அதனால்தான் குறைந்த அளவிலான அகதிகள் மறுகுடியமர்வு திட்டம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், உலகில் அதிக அகதிகளை ஏற்றுக்கொள்ளும் சில நாடுகளில் ஒன்றாக கனடா இன்னமும் திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று, அதிக அகதிகளை வரவேற்க கனடா மூன்று புதிய திட்டங்களை அறிவித்தது.
அவற்றில் அகதிகளுக்கு தனியார் ஸ்பான்சர் செய்யும் திட்டம் ஒன்றும், கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் protected persons என்ற வரையறையின் கீழ் வரும் அகதிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 23,500இலிருந்து 45,000ஆக உயர்த்துவதும் அடங்கும்.
ஆனால், இதெல்லாம் போதுமானதல்ல என்கிறது Migrants Rights Canada என்னும் அமைப்பு. Protected persons என்ற வரையறையின் கீழ் வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 23,500இலிருந்து 45,000ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், ஏற்கனவே காத்திருப்போரின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், எல்லை மூடல் முதலான பிரச்சினை காரணமாக 2020இல் 18,500 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடிந்தது என்றும் கூறுகிறது அந்த அமைப்பு.
இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதகவும் குற்றச்சாட்டு ஒரு புறம் எழுந்துள்ளது.
காத்திருந்து சலித்துப்போனோம் என்று கூறும் வான்கூவர் பணியாளர்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த Julie Diesta, அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் முழுமையான மற்றும் நிரந்தர புலம்பெயர்தல் நிலை வேண்டும் என்கிறார்.