கனேடிய இராணுவத்தில் ஆளணி பற்றாக்குறை
கனேடிய இராணுவம் தனது செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவில் புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்து, பயிற்சி அளிக்க முடியாமல் தவித்துவருவதாக கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் கரென் ஹோகன் சமர்ப்பித்த புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
2022 முதல் 2025 வரையிலான காலத்தில் கனேடிய ஆயுதப்படைகள் (CAF) 19,700 புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டிருந்தன.
ஆனால் அந்த காலகட்டத்தில் 1.92 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தபோதிலும், வெறும் 15,000 பேரையே சேர்த்துக்கொள்ள முடிந்தது.
ஆட்சேர்ப்பு இலக்கு
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தாலும், சராசரியாக 13 பேரில் ஒருவர் மட்டுமே அடிப்படைப் பயிற்சியைத் தொடங்குவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், ஆட்சேர்ப்பு செயல்முறை 100 முதல் 150 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு இருந்தபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதற்கு இரட்டிப்பு நேரம் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தாமே ஒப்புக்கொண்டபடி, ஆட்சேர்ப்பு இலக்கை அடைந்திருந்தாலும், புதிய ராணுவ வீரர்களுக்கு தேவையான அடிப்படைப் பயிற்சியை அளிக்கும் திறன் இராணுவத்தில் இல்லை.
கடந்த ஆண்டில் கூடுதல் பயிற்சி குழுக்கள் உருவாக்கப்பட்டு, தற்காலிக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அது நீண்டகாலத் தீர்வாக அமையாது என கனடிய ஆயுதப்படைகள் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதே சமயம், பைலட்டுகள், குண்டு தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற முக்கிய துறைகளில் திறமையான பணியாளர்களை ஈர்த்து வைத்திருக்க இராணுவம் சிரமப்படுவதாகவும், பல பயிற்சி பெற்ற வீரர்கள் பணியை விட்டு வெளியேறுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பான ஐ.டி. அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாமல், கைமுறை தரவு உள்ளீடுகள் தேவைப்படுவதும், பாதுகாப்பு சோதனைகள் பெருமளவில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆட்சேர்ப்பிலும் இலக்கை அடைய முடியாமல் இருப்பது கூடுதல் பிரச்சினையாகும்.