அதிக தேவை உள்ள வேலைகளுக்கு பயிற்சி பெறுங்கள்: உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த புலம்பெயர்ந்தோருக்கு அமைச்சரின் ஆலோசனை
கனேடிய மாகாணமொன்று வெளிநாட்டவர்களுக்கெதிராக எடுக்க இருக்கும் முடிவொன்றை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், அவர்களை சந்தித்த தொழிலாளர் துறை அமைச்சர், எந்தெந்த துறைகளில் வேலை உள்ளதோ, அந்த வேலைகளில் பயிற்சி பெறுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த ஆண்டில், மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் மற்றும் வீடுகள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுக்க இருப்பதாக அம்மாகாணம் அறிவித்துள்ளது.
மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் கட்டுமானப் பணி செய்வோர் போன்ற சில துறையினருக்கு மட்டுமே நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. அதன் பொருள் என்னவென்றால், அடுத்த சில மாதங்களில், மற்ற துறைகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் பணி அனுமதிகள் நீட்டிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது என்பதுதான்.
Sheehan Desjardins/CBC
ஆகவே, மாகாண அரசின் இந்த முடிவை எதிர்த்து தலைநகர் Charlottetownஇல் புலம்பெயர்ந்தோர் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
மாகாண அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறிய அவர்கள், மே மாதம் 16ஆம் திகதி தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.
Sheehan Desjardins/CBC
இந்நிலையில், மாகாண தொழிலாளர் துறை அமைச்சரான Jenn Redmond, ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரை நேற்று சந்தித்து அவரிடம் பிரச்சினைகளைக் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், 2025இல் பணி உரிமம் காலாவதியாகும் நிலையிலிருப்போர், பயிற்சித் திட்டம் ஒன்றில் இணையலாம் என அவர் ஆலோசனை கூறினார். அதாவ்து, எந்தெந்த துறைகளில் பணியாளர்களுக்கு அதிக தேவை உள்ளதோ, அந்த துறைகளில் பணி புரிவதற்கு, உரிய பயிற்சி பெறுமாறு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |