இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சிக்கிய கனடியர் மீட்பு
இஸ்ரேலின் தெல் அவிவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் இருந்து கனடா தூதரக ஊழியர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
“ஈரான் தாக்குதலின்போது அந்தக் கட்டிடத்திற்குள் இருந்த கனடியரை மீட்ட இஸ்ரேல் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.
“அவர் அந்தக் கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களுடன் இணைந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்,” என அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
“இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமையை கனடா முழுமையாக ஆதரிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சர் கிடியோன் சாருடன் சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு மற்றும் ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு மேற்கொண்ட வரலாற்றிலேயே இல்லாத தாக்குதலுக்குப் பதிலாக, அதே நாளில் ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியிருந்தது.