கனேடியர் விற்ற ரசாயனத்தால் உயிரிழந்த பிள்ளைகள்: அடுத்த ஆண்டில் துவங்க இருக்கும் வழக்கு விசாரணை
கனேடியர்கள், பிரித்தானியர்கள் உட்பட பல பிள்ளைகள், கனேடியர் ஒருவரிடமிருந்து நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, அதை உட்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் பல நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (58)என்னும் கனேடியர், இணையதளம் வாயிலாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் ரசாயனம் ஒன்றை விற்பனை செய்துவந்தார்.
Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட்கள் விஷம் அனுப்பியுள்ளார்.
நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.
அந்த ரசாயனத்தை வாங்கி உட்கொண்டு 127 பேர் வரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து, பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, 2023ஆம் ஆண்டு, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.
இந்நிலையில், Kenneth Law மீதான வழக்கு விசாரணை, 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி துவங்க இருப்பதாக, பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒன்ராறியோ நீதிமன்ற அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். அந்த வழக்கு விசாரணை எட்டு வாரங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kenneth Law மீது, கனடாவில் மட்டுமே 14 கொலை வழக்குகளும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கு உதவியதாக 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.