அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட கனடிய பெண் அடையாளம் காணப்பட்டார்
அவுஸ்திரேலிய கடற்கரையில் டிங்கோ நாய்கள் சூழ்ந்த நிலையில் உயிரிழந்ததாகக் கண்டெடுக்கப்பட்ட கனடிய இளம்பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண்ணின் மரணம், தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில போலீஸார் தெரிவிப்பதன்படி, 19 வயதுடைய இளம்பெண்ணின் உடல் K’gari எனப்படும் (முன்பு பிரேசர் தீவு) கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் சுமார் 10 டிங்கோ நாய்கள் கொண்ட கூட்டத்தால் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஊடகங்களில் பல, உயிரிழந்த பெண்ணை ‘பைபர் ஜேம்ஸ்’ (Piper James) என அடையாளம் காண்பித்துள்ளன.
உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய நண்பரான பிரியானா ஃபால்க் கூறுகையில், ஒரு கார் விற்பனை நிலையத்தில் தனது தினசரி பணியில் இருந்தபோது, ஆரம்ப கட்ட செய்தி அறிக்கைகளை பார்த்து தாம் மிகுந்த பதற்றத்தில் ஆழ்ந்ததாக தெரிவித்தார்.
பின்னர், அந்த மரணச் செய்தியை குடும்பத்தினரிடமிருந்து அறிந்த ஒரு நண்பர் மூலம் தமது அச்சம் உண்மையென உறுதியாகியதாகவும் அவர் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் கேம்பெல் ரிவர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில வகுப்பில் இருவரும் சந்தித்ததாக ஃபால்க் நினைவுகூர்ந்தார்.
வாழ்க்கையை நேசிப்பவர், இயற்கையுடன் நேரம் செலவிட விரும்புபவர், எப்போதும் உரையாடத் தயாராக இருப்பவர் என்ற வகையில் தனது நண்பரை அவர் விவரித்தார்.
“எங்களுக்கு நிறைய திட்டங்கள் இருந்தன. அவள் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழந்துவிட்டாள்,” என ஃபால்க் கூறினார். “இப்படியான சம்பவம் நமக்கு தெரிந்த ஒருவருக்கே நடக்கும் என்று நினைக்கவே முடியாது; அதிலும் என் மிக நெருங்கிய நண்பருக்கு நடக்கும் என்று கனவிலும் எண்ணியதில்லை,” எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.