எல்லைப் பகுதியில் அமெரிக்க அதிகாரியை உதைத்ததாக கனடிய பெண் மீது குற்றச்சாட்டு
கனடாவைச் சேர்ந்த ஒரு பெண், வாஷிங்டன் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அமெரிக்க எல்லை அதிகாரியின் முகத்தில் காலால் உதைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பெண்ணுக்கு எதிராக அமெரிக்க அதிகாரியை தாக்குதல் மற்றும் தவறான நுழைவு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரேயின் தெற்கில் அமைந்துள்ள பீஸ் ஆர்க் எல்லைச் சாவடியில், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த காரணத்தால் குறித்த பெண்ணுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனடா–அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள பீஸட் ஆர்க் ஸ்டேட் பார்க் பகுதியில் உள்ள பாதுகாப்பு இடைவெளி (buffer zone) வழியாக அவர் நடந்து சென்றதை எல்லை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பூங்காவில் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு வந்த எல்லை அதிகாரிகள், அந்த பெண் அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தியதுடன், கைது செய்ய முயன்றபோது எதிர்த்துப் போராடி, ஒரு பெண் மேற்பார்வையாளர் அதிகாரியின் முகத்தில் காலால் உதைத்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும், தாம் யாரையும் திட்டமிட்டு தாக்கவில்லை என குறித்த பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.