வெளிநாடு ஒன்றில் ஹொட்டல் அறைக்குள் பதுங்கியிருக்கும் கனேடிய மக்கள்: வெளிவரும் புதிய தகவல்
மெக்சிகோவில் முக்கிய போதை மருந்து குழு தலைவைனை கைது செய்த நிலையில், வெடித்த கலவர சம்பவங்களால் கனேடிய பயணிகள் பலர் ஹொட்டலுக்குள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவின் Mazatlan பகுதியிலேயே கனேடிய பயணிகள் ஹொட்டலுக்குள் பதுங்கியுள்ளதாகவும், அவர்கள் பத்திரமாக உள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எட்மண்டன் பகுதி பெண் ஒருவர் தெரிவிக்கையில், தமது குடும்ப உறுப்பினர்கள் 6 பேர்கள் வியாழக்கிழமை மதியத்திற்கு மேலிருந்து தங்கள் ஹொட்டல் அறைக்குள்ளே இருப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போதை மருந்து கடத்தல் மன்னன் El Chapo என்பவரின் மகன் Ovidio Guzman கைதான நிலையில், மெக்சிகோ நாட்டின் பல மாகாணங்களில் கலவரம் வெடித்துள்ளது.
குறிப்பாக Culiacan, Mazatlan, Los Mochis மற்றும் Guasave ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
விமானங்கள் பல ரத்தாகியுள்ளதால், வெளிநாட்டவர்கள் தற்போது வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், வன்முறை சம்பவங்களால் இதுவரை 29 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.