சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களினால் தனியுரிமை ஆபத்தா?
சில வாரங்களுக்கு முன் ஒட்டாவா அரசு, சீனாவில் தயாரிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை (EV) கனடா சந்தையில் அனுமதிப்பதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆபத்து குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
எனினும், புதிய வாகனம் வாங்க விரும்பும் பல நுகர்வோருக்கு இது பெரிய தடையாகத் தெரியவில்லை. தனியுரிமை பிரச்சினை எல்லா ‘connected vehicles’ களுக்கும் பொருந்தும். அமெரிக்காவுடன் பகிரப்படும் தரவும் கவலைக்குரியது தான். அதனால் சீன வாகனங்கள் மட்டும் அதிக ஆபத்து என நான் நினைக்கவில்லை,” என வாடிக்கையாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.

61% கனடியர்கள் சீன மின்சார வாகனங்களை சந்தையில் அனுமதிப்பதை ஆதரித்துள்ளனர்.
வாகனத் தரம் மற்றும் கனடிய கார் தொழில்துறைக்கு ஏற்படும் பாதிப்பு (38%) ஆகியவை, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு (33%) கவலைகளை விட அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதவேளை, சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், நவீன வாகனங்கள் அனைத்தும் “சக்கரங்களில் ஓடும் கணினிகள்” என்று எச்சரிக்கின்றனர்.
Darktrace நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு அதிகாரி டேவிட் மாசன், “வாகனம் மின்சாரமா, பெட்ரோலா என்பது முக்கியமில்லை; இவை அனைத்தும் டிஜிட்டல் தரவை சேகரிக்கின்றன,” என தெரிவித்துள்ளார்.
இன்றைய வாகனங்கள் சேகரிக்கும் தரவு பட்டியல் நீளமானது: குரல், இருப்பிடம், ஓட்ட வேகம், இசை விருப்பம், சுற்றுப்புற சூழல், ஓட்டுநரின் கவன நிலை உள்ளிட்டவை.
மேலும், ஸ்மார்ட்போன்கள் இணைக்கப்பட்டால் அதிலுள்ள தரவும் அணுகக்கூடியதாக இருக்கும்.
சீனாவில் இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டங்கள், அந்நாட்டு நிறுவனங்களை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க கட்டாயப்படுத்துகின்றன. அதேபோல் அமெரிக்காவின் “Cloud Act” சட்டமும் வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவை அரசாங்கத்துடன் பகிர்வதை அனுமதிக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.