அமெரிக்கா கனடாவை நேரடியாக கைப்பற்ற முயற்சிக்கலாம்: மக்கள் கருத்து
வெனிசுவேலாவில் சமீபத்தில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ தலையீட்டுக்குப் பின்னர், கனடாவில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
கனடியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர், எதிர்காலத்தில் அமெரிக்கா கனடாவை நேரடி நடவடிக்கைகள் மூலம் கைப்பற்ற முயற்சிக்கலாம் என நம்புவதாக அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
லெஜர் (Leger) நிறுவனம் நடத்திய இந்த இணைய வழி கருத்துக்கணிப்பில், ஜனவரி 9 முதல் 11 வரை 1,540 கனடியர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேரடி தலையீடு
கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்கா எதிர்காலத்தில் பல நாடுகளில் நேரடி தலையீடுகளை மேற்கொள்ளக்கூடும் என கனடியர்கள் நம்புகின்றனர்.
கிரீன்லாந்து, கியூபா, கொலம்பியா, பனாமா, ஈரான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இதில் அடங்கும். எதிர்காலத்தில் அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுத்து கனடாவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளதாக 31 சதவீத கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 55 சதவீதம் கிரீன்லாந்தில், 51 சதவீதம் கியூபாவில், 47 சதவீதம் கொலம்பியா மற்றும் பனாமாவில், 36 சதவீதம் ஈரானில் அமெரிக்க தலையீடு நடக்கலாம் எனக் கணித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு 1,011 அமெரிக்கர்களிடமும் நடத்தப்பட்டுள்ளது. அதில், 20 சதவீத அமெரிக்கர்கள், எதிர்காலத்தில் தங்கள் அரசு கனடாவை கைப்பற்ற நேரடி நடவடிக்கை எடுக்கக்கூடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
வெனிசுவேலாவில் அமெரிக்க இராணுவ தலையீடு அந்த நாட்டின் இறையாண்மையை மீறியதாகவும், அது மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியதாகவும் 53 சதவீத கனடியர்கள் கருதுகின்றனர்.