கனேடிய பொருட்களை மட்டுமே வாங்குவதில் தீவிரம் காட்டும் கனேடியர்கள்
Buy Canadian movement just as strong 19 months since trade war began: அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் துவங்கி 19 மாதங்களாகியும், கனேடிய மக்களின் மன நிலைமையில் மாற்றம் இல்லை.
கனேடிய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூடுதல் வரிகள் விதித்தது, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதாக மிரட்டியது போன்ற விடயங்களால் கனேடிய மக்களுக்கு ஏற்பட்ட கோபம் குறைந்துள்ளதா?

கனேடிய மக்களுக்கு ட்ரம்ப் மீதான கோபம் குறைந்துள்ளதா, அவர் மீதான கோபத்தால் அமெரிக்கப் பொருட்களை புறக்கணித்து கனேடிய பொருட்களை மட்டுமே வாங்கும் மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தகப்போர் துவங்கி 19 மாதங்கள் ஆன நிலையிலும், கனேடியர்கள், கனேடிய பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதில் சற்றும் மாறவில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.
Abacus Data என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கவேண்டும் என்னும் கனேடியர்களின் மன நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லை என்பது தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், முதன்முறையாக, கனடாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார் ட்ரம்ப்.

அப்போது, ட்ரம்பின் இந்த நடவடிக்கையால், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் எண்ணம் உள்ளதா என Abacus அமைப்பு கேட்டபோது, 78 சதவிகிதம் கனேடியர்கள் ஆம் என பதிலளித்தார்கள்.
19 மாதங்கள் ஆனபின்பும், அந்த எண்ணிக்கை 77 சதவிகிதமாகவே உள்ளது.
அதற்கும் மேல், இனி அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என 2025இல் 32 சதவிகித கனேடியர்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 52 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
விடயம் என்னவென்றால், அமெரிக்க எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதை தவிர்த்துவருவதாக 33 முதல் 39 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், கனேடியர்கள் வால்மார்ட் நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவதும், அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவதும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.