கனடாவில் வாகன விற்பனையில் அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கனடாவின் சில்லறை விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகனப் பாகங்கள் துறையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது தொடர்ச்சியான மாதமாக, வாகனங்கள் மற்றும் பாகங்கள் விற்பனையில்1.8% உயர்வு பதிவாகியுள்ளது.

புதிய கார்கள் விற்பனை நிலையங்களில் 2.3% வளர்ச்சி காணப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை நிலையங்களில் 1.5% உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, எரிபொருள் நிலையங்கள் மற்றும் எரிபொருள் விற்பனையாளர்களின் விற்பனை 2% வீழ்ச்சியடைந்துள்ளது, இது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக பதிவாகும் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், கனடாவின் சில்லறை விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 1% உயர்ந்து 70.4 பில்லியன் கனடிய டாலராக உயர்ந்துள்ளது. மொத்தம் ஐந்து மாகாணங்கள் விற்பனை உயர்வைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் ஒன்டாரியோ 1.2% வளர்ச்சியுடன் முன்னணியில் உள்ளது.
இதில் வாகனங்கள் மற்றும் பாகங்கள் விற்பனை நிலையங்களே முக்கிய பங்காற்றின. டொரொன்டோ பகுதியில் மட்டும் 2.4% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் மூன்றாவது மாதமாக தொடர்ச்சியான உயர்வு 1.8% ஆகும், இதில் மாண்ட்ரியால் பகுதி 2.3% உயர்வுடன் முன்னிலை வகித்தது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.