ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் தீ விபத்து; வீதிக்கு பூட்டு
ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road) அமைந்துள்ள கார் கேரேஜ் ஒன்றில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள்
விபத்தின் தீவிரத்தினால் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6:00 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை (SFRS) தெரிவித்துள்ளது. தீயின் வெப்பம் காரணமாக கட்டிடத்தின் கூரை முழுமையாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றிய கேரேஜிற்கு அருகிலேயே பிபி (BP) எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் டெஸ்கோ (Tesco) பேரங்காடி அமைந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது. தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயரமான இடங்களுக்குச் செல்லும் விசேட தளம் (High-reach platform) பயன்படுத்தப்பட்டன.
இன்று காலையும் , எஞ்சியுள்ள சிறிய நெருப்புப் பொறிகளை அணைக்கும் (Dampening down) பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விபத்தினால் போத்வெல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
அருகில் உள்ள டெஸ்கோ பேரங்காடி இன்று காலை வரை மூடப்பட்டிருந்தது. விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.