அதிகாலையில் நேர்ந்த விமான விபத்து ; கடலுக்குள் விழுந்த சரக்கு விமானம்
சீனாவின் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருவர் பலி
இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி விமான சேவைக்கு (Air ACT) சொந்தமான போயிங் 747-481 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், எமிரேட்ஸ் விமான சேவையின் EK9788 என்ற விமானப் பயணமாகத் துபாயிலிருந்து வந்துகொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.50 மணியளவில், இது வடக்கு ஓடுபாதையில் தரையிறங்கும்போது, விமான நிலையத்தின் தரைப் பணியாளர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் (Civil Aviation Department) வெளியிட்ட அறிக்கையின்படி, விபத்தின் காரணமாக பணியாளர்கள் இருவர் கடலில் வீழ்ந்துள்ளனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.