டைம் இதழின் உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் கனடிய பிரதமர்
உலகப் புகழ்பெற்ற 'டைம்' (Time) இதழ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலில் கனடிய பிரதமர் மார்க் கார்னி கௌரவமிக்க இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இவரைப் பரிந்துரைத்துள்ளதுடன், "நிதியியல் உலகின் ஜார்ஜ் குளூனி" மற்றும் "ராக்-ஸ்டார் மத்திய வங்கி ஆளுநர்" எனப் பாராட்டியுள்ளார்.
பல்லாண்டுகளாகப் பின்பற்றப்படும் சர்வதேச ஒத்துழைப்பு முறைமை சிதைவடைவதை முன்கூட்டியே இனங்கண்ட தலைவர் என கார்னியைப் புகழ்ந்துள்ள லகார்ட், பொது நலனுக்காக நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை அவர் மீண்டும் கட்டியெழுப்புவார் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பட்டியலில் போப் 14-ஆம் லியோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் கார்னியும் இணைந்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மார்க் கார்னி வெற்றி பெற்றார்.
தொடக்கத்தில் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்த அவர், பின்னர் கியூபெக் மற்றும் ஒன்ராறியோ இடைத்தேர்தல் வெற்றிகள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளார்.