அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்த்து கனடாவை வலுப்படுத்துவோம்: மார்க் கார்னி
சந்தை அதிர்வுகள் மற்றும் அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தகப் போரால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையை நீக்க முயல்வதாக லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
“இந்த வர்த்தகப் போரில் கனடா வெல்லும்,” என அவர் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது வாரத்தில், டொராண்டோ ஸ்கார்பரோவில் பிரசாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்த சண்டையை நாம் கேட்கவில்லை. ஆனால் மோதுவதற்கு முயற்சித்தால், கனடியர்கள் எப்போதும் தயார்,” என்ற அவர், “இந்த வர்த்தகப் போரிலும், ஹாக்கி மற்றும் கால்பந்துபோலவே, நாம் வெல்வோம்,” என கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சுங்க வரி நடவடிக்கைகளை எதிர்த்து, உள்ளூர் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் கனடா தன்னை வலிமைப்படுத்தும் என்று கார்னி குறிப்பிட்டுள்ளார்.