கனடாவின் எண்ணெய் ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும் - கனடிய பிரதமர்
ஆசிய சந்தைகளுக்கான கனடாவின் எண்ணெய் ஏற்றுமதியை விரிவுபடுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா எண்ணெய் அமெரிக்க சந்தையில் கனடா எண்ணெய்க்கு மாற்றாக நுழையக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாரிஸ் விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் வளம் பெருகுவதை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் கனடா எண்ணெய் மிகப் போட்டித்தன்மை கொண்டது.
இந்த சூழலில் ஆசியாவுக்கான ஏற்றுமதியும், புதிய சந்தைகளும் அவசியமானவை,” என கார்னி தெரிவித்தார்.
இதற்கு முன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே, பசிபிக் கடற்கரையை நோக்கி எண்ணெய் குழாய் திட்டத்தை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடிதத்தில், அமெரிக்காவின் வெனிசுவேலா நடவடிக்கைகள் உலகளாவிய எரிசக்தி சூழலை மாற்றியுள்ளன என அவர் குறிப்பிட்டிருந்தார்.