கனடா கடற்படைக்கு 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள்
கனேடிய கடற்படைக்காக 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான முக்கிய முடிவை பிரதமர் மார்க் கார்னி திங்கட்கிழமை ஹாலிஃபாக்ஸ் நகரில் அறிவிக்கவுள்ளார்.
துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படுவதற்கு முன்னதாக பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என அரசாங்க மற்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கனடாவின் இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு சர்வதேச நிறுவனங்கள் இறுதிப் போட்டியில் களமிறங்கியுள்ளன.

ஜெர்மனி மற்றும் நோர்வேயின் கூட்டு நிறுவனமான ThyssenKrupp Marine Systems (TKMS) மற்றும் தென் கொரியாவின் Hanwha நிறுவனம் என்பனவே இவ்வாறு போட்டியிடுகின்றன.
இந்த இரு நிறுவனங்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிப்பு செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளன.
தற்போது கனேடிய கடற்படையிடம் உள்ள நான்கு விக்டோரியா ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளதுடன், ஏனையவை பராமரிப்புப் பணிகளில் உள்ளன.
புதிய திட்டத்தின் கீழ் 12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்யவும், அடுத்த 30 முதல் 50 ஆண்டுகால பராமரிப்புச் செலவுகளுக்குமாக ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் கனேடிய டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நேட்டோவின் புதிய இலக்கை எட்ட கனடா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நீர்மூழ்கிக் கப்பல் கொள்வனவு பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை வெல்வதற்கு, வெளிநாட்டுப் போட்டியாளர்கள் கனேடிய உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை தங்களது திட்டங்களில் அதிகளவில் உள்ளடக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இறுதி விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதியுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.