உள்ளாடை முதல் போதைப்பொருள் வரை திருடும் பூனை! ஓர் சுவாரஸ்ய சம்பவம்
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார்.
குறித்த பூனை தினமும் திருடி வரும் பொருட்களை, வீட்டின் முன்பாக ஒரு பெட்டியில் அவர்கள் வைத்து விடுகிறார்கள்.பொருட்களை தொலைத்தவர்களும் அந்த வீட்டிற்கு நேராக வந்து, பெட்டியிலுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், என நீளும் இந்த பட்டியல், போதைப்பொருள் வரையும் செல்கிறது.
அதுமட்டுமல்லாமல் இரும்பு தகடு பொருத்தப்பட்ட 2.5 கிலோகிராம் எடையுள்ள காலணியொன்றையும் அது திருடி சென்றுள்ளது. பூனையை எப்படி திருத்துவதென தெரியாமல், அதன் உரிமையாளர்கள், பொலிசாரின் உதவியையும் நாடினார்கள். அவர்களும் ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.
ஆரம்பத்தில், அக்கம்பக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் உள்ளாடைகளையும் ஆற்றிலிருந்து விலாங்கு மீன்களையும் குறும்பு பூனை கீத் வீட்டிற்குக் கொண்டுவரத் தொடங்கியது. இந்த நிலையில் அண்மை வாரங்களில் அந்த 5 வயதுக் கறுப்புப் பூனை, கஞ்சா புகைப்பதற்கு பயன்படுத்தும் கருவியையும், போதைப்பொருள் பையொன்றையும் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
அதேவேளை போதைப்பொருள் சிக்கியதில் பொலிசாருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பூனை அதனை எங்கே எடுத்தது என்பதை கண்டறிய முடியாமல் பொலிசார் திண்டாடி வருகிறார்கள். காலணிகளை திருடுவதிலும் ஒரு சுவாரஸ்யமான விடயமுள்ளது.
அதாவது காலணியில் இருக்கும் லேபிளின் நிறுவனத்தின் பெயரை பார்த்தே திருடுகிறது. நைக் அல்லது அடிடாஸ் நிறுவனத்தின் காலணிகளை மட்டுமே திருடுகிறது.
சில நாட்களில் ஒரு இரவில் மட்டும் 6 வரையான பொருட்களை திருடிக் கொண்டு வந்து விடுமாம். பூனையை வீட்டுக்குள் அடைத்து வைக்க முயன்றாலும், எப்படியோ வெளியில் சென்று விடுகிறது..
அதேவேளை வீட்டு உரிமையாளர்கள், தினமும் காலையில் வீட்டின் முன்பாக பெட்டியொன்றை வைத்து, கீத் திருடி எடுத்து வந்த பொருட்களை அதில் வைத்து விடுவதுடன், மன்னிப்பு கடிதமொன்றையும் வைப்பதாகவும் கூறப்படுகின்றது.

