பூர்வக்குடி தலைவர்கள் குழுவை வத்திக்கானுக்கு அனுப்பும் கனேடிய ஆயர்கள்
கனடாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய உண்டுறை பள்ளி விவகாரம் தொடர்பில் விவாதிக்க, பூர்வக்குடி தலைவர்கள் குழுவை, கனேடிய ஆயர்கள் பேரவை வத்திக்கானுக்கு அனுப்ப உள்ளது.
இந்த விவகாரத்தில் கத்தோலிக்க தேவாலயங்களின் பங்கு தொடர்பிலும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் வியாழன்று கனேடிய ஆயர்கள் பேரவை வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பு குழு ஒன்றை உருவாக்கி, வத்திக்கானுக்கு அனுப்பும் நடவடிக்கையை முன்னெடுத்து வந்ததாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இது, பூர்வக்குடி மக்களிடம் இருந்து அவர்கள் இதுவரை அனுபவித்த அவஸ்தைகளை நேரடியாக திருத்தந்தையால் அறிய முடியும் என நம்புவதாக ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து 215 சடலங்கள் மீட்கப்பட்ட பின்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மக்களுக்கு கடும் கோபம் இருந்து வருகிறது.
கடந்த ஞாயிறு திருந்ததை பிரான்சிஸ் இந்த விவகாரம் தொடர்பில், துன்பியல் நிகழ்வு என மட்டுமே குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஆனால், இச்சம்பவம் தொடர்பாக போப் பிரான்சிஸ் கனேடிய பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.