கனடாவில் உணவுப் பொருட்களுக்குள் கடத்தப்பட்ட பொருள்
உணவுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து ஜப்பானுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற ஒருவரை கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 18-ம் திகதி, டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு செல்லவிருந்த ஒரு பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த உணவுப் பொட்டலங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.
சந்தேக நபரிடமிருந்து சுமார் 8 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) வகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்களின்படி, இந்த போதைப்பொருட்கள் புரதச்சத்து பார்கள் (Protein Bars) மற்றும் பிற உணவுப் பொருட்களுக்குள் மிகவும் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்தப் பயணியும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக கனடிய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
"எல்லை தாண்டிச் செல்லும் சட்டவிரோத பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் எங்கள் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்," என கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.