மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT; சவால் விடுக்கும் தொழில்நுட்பம்!
பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட தனது அரிய வகை நோயை, ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம்பெண் ஒருவர் கண்டறிந்துள்ள சம்பவம் இங்கிலாந்தி வேல்ஸ் கார்டிஃப் (Cardiff) பகுதியில் நிகழ்ந்துள்ளது.
கார்டிஃப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஃபோப் டெசோரியர் (Phoebe Tesoriere), தனது சிறுவயது முதலே உடல் சமநிலை இழப்பு மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட அரிய வகை நோய்
19 வயதில் இவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது, அது வெறும் ‘மனப்பதற்றம்’ (Anxiety) என்று மருத்துவர்களால் கூறப்பட்டது. பின்னர் 2022-இல் இவருக்கு ‘வலிப்பு நோய்’ (Epilepsy) இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில் 2025 ஜனவரியில் படிக்கட்டுகளில் இருந்து விழுந்த இவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட சோதனைகளும் எந்தத் தெளிவான முடிவையும் வைத்தியசாலைகள் தரவில்லை.
தொடர் வலிப்புகளால் மூன்று நாட்கள் கோமா நிலையில் இருந்த ஃபோப், தனது அறிகுறிகள் அனைத்தையும் ‘ChatGPT’ செயலியில் பதிவிட்டுள்ளார்.
இதன்போது அந்தத் தொழில்நுட்பம், அவருக்கு ‘பரம்பரை ஸ்பாஸ்டிக் பாராபிலீஜியா’ (Hereditary Spastic Paraplegia) என்ற அரிய வகை மரபணு நோய் இருக்கலாம் எனப் பரிந்துரைத்தது. இந்தத் தகவலைத் தனது பொது மருத்துவரிடம் (GP) ஃபோப் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் (Genetic Testing), அவருக்கு அந்த அரிய வகை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவர் ரெபெக்கா டாம்லின்சன், மக்கள் தங்களது உடல்நலக் கவலைகளை ஆராய AI கருவிகளைப் பயன்படுத்தினாலும், இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது சரியான சிகிச்சையைப் பெற்றுவரும் ஃபோப், பல ஆண்டுகளாகத் தான் எதிர்கொண்ட தனிமைக்கும் குழப்பத்திற்கும் ஒரு விடை கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.