கனடாவில் சிறுவர்கள் மத்தியில் வறுமை அதிகரிப்பு
கனடாவில் சிறுவர்கள் மத்தியில் வறுமை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் குழந்தை வறுமையை ஒழிக்கப் பணியாற்றும் Campaign 2000 அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, உணவு மற்றும் அடிப்படை செலவுகளைச் சமாளிக்க போராடும் குடும்பங்களில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2023ஆம் ஆண்டில் மேலும் 30,000 குழந்தைகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், குழந்தை வறுமை விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உயர்ந்துள்ளது.
அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டில் சுமார் 14 இலட்சம் குழந்தைகள் வறுமையில் வாழ்ந்தனர்.
குறிப்பாக ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் வாழும் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். மொத்த குழந்தை வறுமை விகிதம் 18.3% ஆக பதிவாகியுள்ளது.
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் வாழும் குழந்தைகளில் 45% பேர் வறுமையில் உள்ளனர்
. இதேவேளை, இரு பெற்றோர் குடும்பங்களில் வாழும் குழந்தைகளில் இந்த விகிதம் 10.1% மட்டுமே. COVID-19 காலத்தில் அரசாங்கம் வழங்கிய நிதி உதவிகள் காரணமாக 2020ஆம் ஆண்டில் குழந்தை வறுமை விகிதம் தற்காலிகமாக 13.5% ஆகக் குறைந்திருந்தது.
ஆனால் அதன் பின்னர் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. அறிக்கை மேலும் குறிப்பிடுவதாவது, கனடாவில் வறுமையில் வாழ அதிக வாய்ப்புள்ள வயது குழு குழந்தைகளே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.