விளையாட்டு விபரீதமானதால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பலூன் வீடு அமைப்பு காற்றில் தூக்கி வீசப்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா மாகாணம் டெவன்போர்ட் பகுதியில் உள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக புது விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், பலூனில் முற்றிலும் காற்று நிரப்பப்பட்டு வீடு போன்ற அமைப்பை உருவாக்கி குழந்தைகள் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கிய பிறகு குழந்தைகள் ஆரவாரத்துடன் பலூன் வீடு அமைப்பில் ஏறி விளையாட ஆரம்பித்தனர்.
அப்போது, திடீரென பலத்த காற்று வீச தொடங்கியதால், அந்த பலூன் வீடு அமைப்பு தரைமட்டத்தில் இருந்து மேலே எழும்பி காற்றில் பறந்தது. இதனால், அந்த பலூன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் வானில் பறக்க தொடக்கினர்.
அதீத காற்று வீசியதால் 10 மீட்டர் உயரத்திற்கு சென்ற பலூன் வீடு காற்றின் வேகம் குறைந்ததால் அந்த உயரத்தில் இருந்து பள்ளிக்கு அருகே இருந்த மரத்தின் மீது விழுந்தது. இதில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளிக்குழந்தைகள் 9 பேர் தூக்கி வீசப்பட்டதில் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 4 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அதீத காற்றால் பலூன் வீடு தூக்கி விசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் இந்த விபத்துக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

