கொரோனா காலகட்டத்தின்போது காணாமல் போயிருந்த வைரஸ்கள் மீண்டும் குழந்தைகள் மீது தாக்குதல்

Balamanuvelan
Report this article
கொரோனா தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்திலிருந்து வெளியே வரும் குழந்தைகள், கொரோனா காலகட்டத்தின்போது காணாமல் போயிருந்த வைரஸ்களால் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு முதல், சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மற்றும் வீடுகளுக்குள் இருத்தல் ஆகிய கொரோனா கால கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில், மற்ற வழக்கமான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் பரவலும் கட்டுக்குள் இருந்தது. உதாரணமாக, ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ், ரெஸ்பைரேட்டரி சின்சைட்டியல் வைரஸ் (RSV) மற்றும் ப்ளூ வைரஸ் ஆகியவை பரவாமல் இருந்தன.
இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், குழந்தைகள் நீண்ட நாட்களாக இத்தகைய வைரஸ்களுடன் தொடர்பு கொள்ளவே இல்லை. ஆகவே, அவர்களது உடல்கள் இந்த வைரஸ்களுக்கெதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கவே இல்லை.
அதாவது, இந்த வைரஸ்களுக்கு எதிராக அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. இப்போது மீண்டும் அவர்கள் பொதுமுடக்கத்திலிருந்து வெளிவரும் நிலையில், அதாவது சகஜ வாழ்வுக்குத் திரும்பும் நிலையில், மருத்துவமனைகளில் அந்த வைரஸ்களின் தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகள் மீண்டும் அனுமதிக்கப்படுவதை மருத்துவர்கள் காணத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுக்களிலிருந்து தாமாகவே விடுபட்டு விடுவார்கள். ஆனால், அதிகரித்து வரும் RSV வைரஸ் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதுவும் ஒரு சாதாரணமான வைரஸ்தான் என்றாலும், அது பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கடுமையான சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துவதால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சமீபத்தில்தான், தங்கள் நாட்டில் RSV வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன், சுவாசக் கோளாறுகளுடன் வரும் குழந்தைகளுக்கு கொரோனா இல்லையென்றால், அடுத்ததாக RSV தொற்று உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. R
SV வைரஸ், ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு bronchiolitis மற்றும் நிமோனியா ஆகிய பிரச்சினைகளை உருவாக்ககூடியது என அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.